நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு - அண்ணாமலை x தள பதிவு!
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர வைத்துள்ளன. இந்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி ஒருவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன என முன்னாள் பாஜாக மாநில தலைவரான அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தக் கிட்னி திருட்டு குறித்து செய்திகள் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்த பின்னரும், புரோக்கராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்னும் கைது செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் கூறி வரும் நிலையில், அந்த நபர் தனது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன.
திமுக அரசு தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையே இத்தகைய குற்றச் செயல்களில் அவர்கள் தைரியமாக ஈடுபடக் காரணம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை இதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உடல் உறுப்பு திருட்டு என்பது உலக அளவில் கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுவது, இந்தக் குற்றத்தில் திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
திராவிட ஆனந்தன் தனி நபராக இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதில் தொடர்புடைய நபர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.