நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!
நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல. கணேசன், தனது இல்லத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகக் கடந்த 10 நாட்களாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80.
ஆளுநர் இல. கணேசன், நாகாலாந்தில் உள்ள தனது இல்லத்தின் கழிப்பறையில் கால் இடறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று காலை அவரது நிலைமை கவலைக்கிடமானது. மருத்துவர்களின் தொடர் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இல. கணேசன், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தீவிர உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், பாஜகவில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார்.அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இல. கணேசனின் மறைவு, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.