ஆக.15-ல் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து?
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை ஆக.15 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 அக்டோபர் 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.
நாகை துறைமுகத்தில் மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சர், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தனர். காணொலிக் காட்சி மூலம் வெளியுறத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.
எனினும், ஒரே வாரத்தில் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும், பயணிகள் போதியளவு முன்பதிவு இல்லை போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மேலும் இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதி, சூறைக்காற்றுடன் கொந்தளிப்பாக காணப்பட்டதால், கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 2024 ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, 2024 மே 13-ஆம் தேதி நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இன்ட்ஸ்ரீ தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆக.15-இல் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் கப்பல் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.