ஒரே இரவு; மூன்று வீடு; பீரோக்களை காலி செய்த மர்ம நபர்கள் - போலீசார் தீவிர விசாரணை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடப்பாரையால் பூட்டை உடைத்து நள்ளிரவில் அரங்கேறிய இந்தக் கொள்ளைச் சம்பவங்களில், சுமார் 15 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் குருவன்கோட்டை சாலை ஓடை தெருவைச் சேர்ந்த சுயம்பு (50), சாலைப் பணியாளராகப் பணிபுரிகிறார். ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்தார்.
நேற்று நள்ளிரவில் அவரது வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவின் பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த கம்மல், மோதிரம் உட்பட 7 கிராம் நகைகளையும், மகள் திருமணத்திற்காக வைத்திருந்த ₹1.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதிர்ஷ்டவசமாக, சுயம்பு தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த மேலும் 200 கிராம் நகைகளை வீட்டில் வேறு ஒரு இடத்தில் வைத்திருந்ததால், அவை கொள்ளையர்கள் கண்ணில் சிக்காமல் தப்பின.
மேலும் சுயம்புவின் வீட்டின் அருகிலேயே வசிக்கும் சொரிமுத்து என்பவரது வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது. இவர் தனியார் பால் கம்பெனி ஊழியர் ஆவார். இவரும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், கொள்ளையர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சல்லடை போட்டு தேடியுள்ளனர்.
வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 கிராம் எடைகொண்ட 2 மோதிரங்கள் மற்றும் ₹10 ஆயிரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஆலங்குளம் நேருஜி நகரில் தனியாக வசித்து வந்த கனியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிலும் கொள்ளை அரங்கேறியுள்ளது. இவரது வீட்டின் பூட்டையும் உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்து 4 கிராம் நகைகளையும், ₹40 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் நள்ளிரவில் சாலைப் பணியாளர், பால் வியாபாரி, மற்றும் ஒரு மூதாட்டி என மூன்று வீடுகளில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் ஆலங்குளத்தில் பீதியை கிளப்பியுள்ளன. மொத்தமாக சுமார் 15 கிராம் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.