"எனக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி" - சு.வெங்கடேசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
எனக்கு கிடைத்த வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த நிலையில், மதுரை தொகுதியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,29,581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவருமான சங்கீதா வெற்றிச் சான்றிதழை வழங்கினார். இதனையடுத்து அவருக்கு நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
"எனக்கு கிடைத்த வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதுகிறேன். 2019 நாடாளுமன்ற தேர்தலை விட 3 இல் 1 பங்கு வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது அரசியல் வரலாற்றில் மிக முக்கிய செய்தியாக உள்ளது. இந்தியா முழுக்க உள்ள அரசியல் சூழலில் தமிழ்நாடு மிக வலிமையாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கும். 2024 தேர்தலின் தாக்கம் 2026 இல் இருக்கும். இந்தியாவில் மோடி ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பின் அரசியல் உள்ளடக்கத்தை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.