“முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில், முருகன் கோயிலும் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவும் அமைந்துள்ளது. இதில் தர்ஹாவில் ஆடுகளை பலி செலுத்துவதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பு நீண்ட காலமாக தர்ஹாவில் ஆடுகளை பலியிட்டு சமபந்தி நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.
இந்த பிரச்னை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பூதாகரமாக வெடித்திருக்கும் பட்சத்தில், இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 17வது நாளாக மக்களைத் தேடி பயணம் மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுவரை 2,065 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. வருகிற 2ம் தேதி 67 கோயில்களிலும், 3 ம் தேதி 27 கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும். மதம், மொழி, இனம் என மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முதலமைச்சர் ஒடுக்குவார். எல்லோருக்குமான அரசாங்கமாக திமுக அரசு செயல்படும். எனவே முருகரும் காப்பாற்றபடுவார் அல்லாவும் காப்பாற்ற படுவார்” என்று தெரிவித்தார்.