For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!

09:50 AM Jan 25, 2024 IST | Jeni
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்   கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. மக்களின் அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்துவதில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்.

நேற்று முழுவதும் வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பின் தொடர்ந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும் அவர் குறித்து, அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் நேசபிரபு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உள்ளூர் காவல்நிலையமான காமன்நாயக்கன்பாளையம் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேசபிரபுவை தொடர்பு கொண்ட காமன்நாயக்கன்பாளையம் போலீசார் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

அடுத்தடுத்து மர்ம நபர்கள் நேசபிரபுவை பின் தொடர, 4 மணிநேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை அலட்சியமாக கையாண்ட காவல்துறையினர், நேரில் வந்து புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துகொண்ட நேசபிரபு இரவு 9 மணியளவில் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கும் சிலர் இவரை நோட்டம் விட்டு பின்தொடர, காவல்துறையினருக்கு வந்தவர்களின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை விவரமாக எடுத்துக் கூறி பாதுகாப்பு கேட்டு நேசபிரபு கெஞ்சியுள்ளார். அப்படி காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் 5 வாகனங்களில் வந்த மர்மகும்பல் நேசபிரபுவை சுற்றி வளைத்தது.ஒரு கட்டத்தில் நேசபிரபுவை மர்ம கும்பல் நெருங்கியபோது, அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் ஓடியுள்ளார். இருப்பினும் அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது. இதில் நேசபிரபுவுக்கு இடது கை பலத்த சேதம் அடைந்தது. மேலும் கால், மார்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்ந்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நேசபிரபுவை மீட்டு பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

செய்தியாளர் தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேர்காணல் நடத்திய நியூஸ்18 கார்த்திகை செல்வன் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement