அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் - பாஜக நபருக்கு முன்ஜாமின் மறுப்பு!
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், பாஜகவைச் சேர்ந்த நபருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது, சிலர் சேற்றை வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் இருவேல்பட்டுவைச் சேர்ந்த விஜயராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் சம்பவ இடத்தில் மட்டுமே தான் இருந்ததாகவும், சேற்று வீசிய சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், மனுதாரர் பாஜகவை சேர்ந்தவர் என்றும், அரசியல் காழ்புணர்ச்சியுடன் சேற்றை வீசி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், எனவே முன்ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் சமர்பித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அரசியல் காழ்புணர்ச்சியோடு மனுதாரர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.