மதுரை எம்பி சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முந்தினம் (ஜன 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வந்த மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதுகுவலி மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இன்று மாலை சிகிச்சை முடிவடைந்து வீட்டிற்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.