தாய் நடத்துநராக பணி புரியும் பேருந்தை இயக்கி ஓட்டுநராக பணியை தொடங்கிய மகன்! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஒரே பேருந்தில் தாய் நடத்துநராகவும், மகன் ஓட்டுநராகவும் பணிபுரிந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் 2009 முதல் ஆரியநாடு டெப்போவில் மாற்று நடத்துநராக இருந்த யமுனா, 2022 முதல் ஸ்விப்ட்-ல் பணியாற்றி வருகிறார். ஸ்விப்ட் பேருந்தின் முதல் பெண் ஊழியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்த்து விட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் தனது மகனை டிரைவராக பயிற்சி பெற செய்தார். பயிற்சி முடிந்ததும் வனத்துறையில் தற்காலிக டிரைவராக ஸ்ரீராக் பணிக்கு சேர்ந்தார்.
அதில் இருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பலனாக கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஸ்ரீராக்கிற்கு டிரைவர் வேலை கிடைத்தது. அவருக்கு திருவனந்தபுரம் நகரில் ஓடக்கூடிய அரசு போக்குவரத்து கழக மின்சார ஸ்விப்ட் பேருந்தில் வேலை கிடைத்தது. தனது முதல் நாள் வேலையை, தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார். தன்னுடைய இந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்களின் தலையீட்டால் அவரது விருப்பமும் நிறைவேறியது.
இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மின்சார பேருந்தை முதன்முதலாக ஸ்ரீராக் இயக்கினார். அவரின் விருப்பப்படி அவரது தாய் யமுனா அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார். தாய் கண்டக்டராகவும், மகன் டிரைவராகவும் இருந்து இயக்கிய பஸ்சை பலரும் ஆர்வமாக பார்த்தனர். தாயும் மகனும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த அந்த நிகழ்வை காண யமுனாவின் மற்ற மகன்கள், ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கேஎஸ்ஆர்டிசி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.