குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை - விமான நிலையங்களில் உஷார் நிலை!
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக 3 மருத்துவமனைகளை நோடல் மையங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட்14-ம் தேதி பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.
இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட விஆர்டிஎல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பை எதிர்கொள்வதற்கான தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்கான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. அப்போது, குரங்கு அம்மை பாதிப்பை விரைவாக கண்டறிவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும், கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி நோய் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொடர்பான அறிகுறிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவிக்க சுகாதார அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மிஸ்ரா இந்த கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் 3 மருத்துவமனைகளை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் சிகிச்சை செய்வதற்கான நோடல் மையங்களாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட விஆர்டிஎல் ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை வைரஸை கண்டறிவதற்கான வசதிகள் உள்ளன. குரங்கு அம்மை பாதிப்பு கடைசியாக 2024 மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.