“மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்” -மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
“மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்; வேண்டும் மோடி மீண்டும் மோடி” என ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு இன்று பிற்பகல் வந்தார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவர் சூலூரிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பல்லடம் சென்றார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரதமர் மோடியை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, இரு புறமும் கூடிநின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாசாரத்தை உலகம் முழுக்க எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார். இத்தகைய மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். வேண்டும் மோடி மீண்டும் மோடி” என்றார்.