மாயமான ஊராட்சி செயலாளர் குட்டையில் சடலமாக மீட்பு... ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கரிக்கல் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில் நேற்று (மே 21) காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற வெங்கடேசன் மீண்டும் இரவு வீடு திரும்பவில்லை.
இதையும் படியுங்கள் : மார்கன் படத்தின் Motion போஸ்டர் வெளியானது!
இதனால் அச்சமடைந்த அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று கரிக்கல் கல்குவாரி குட்டையில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் கரிக்கல் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் என்பது தெரிய வந்தது. வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான ஊராட்சி செயலாளர் குட்டையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.