'மிக்ஜாம்' புயல் - கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்!
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை நடைபெறவுள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 34/2022-ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த நவ.22-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய 2 நாட்கள் (டிச.4,6) உள்ள நிலையில், தமிழக அரசு நாளை (டிச.4) பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இந்த நிலையில் நாளை (டிச.4) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு டிச.6-ம் (புதன் கிழமை) தேதிக்கும், டிச.6-ம் தேதி (புதன் கிழமை) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் டிச.7-ம் தேதிக்கும் (வியாழக்கிழமை) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே நாளைய (திங்கட்கிழமை) நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை அன்றும், புதன் கிழமை அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை அன்றும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.