For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்" - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
07:07 AM Jul 17, 2025 IST | Web Editor
அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்    எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
Advertisement

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப் பயணத்தின் எட்டாம் நாளான நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார். இறுதியாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது, "எனது எழுச்சி பயணம் ஸ்டாலின் தூக்கத்தை கலைத்துவிட்டது. நேற்று சிதம்பரம் வந்து உங்களுடன் ஸ்டாலின் என்ற விளம்பரத்தை வெளியிட்டார். இத்தனை நாளாக யாருடன் இருந்தார் ஸ்டாலின்? ஓட்டுபோட்ட மக்களை இப்பத்தான் சிந்திக்க ஆரம்பித்திருக்கார். மக்கள் செல்வாக்கை இழந்த நிலையில் மக்களை ஏமாற்றவே இந்த புதிய திட்டம் கொண்டு வந்திருக்கிறார்.

46 கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறாராம். 50 மாதம் மக்களுக்கு நாமம் சாத்தியதுதான் மிச்சம். அம்மா ஆட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமந்தோறும் மக்களை சந்தித்து வந்தனர். இதை காப்பியடித்து ஸ்டிக்கர் ஒட்டி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார். வாரம் ஒருமுறை கோட்டாட்சியர், தாசில்தார், விஏஓ போன்றவர்கள் மக்களை சந்தித்து குறைகளை தீர்த்தது அரசு, நமது அம்மா அரசு. உங்களைப் போன்று மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை.

ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி, பேரு வைப்பார். ஒரே திட்டத்துக்கு பல பேர் வைத்த ஒரே முதல்வர் ஸ்டாலின். இதுக்கு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களை நியமித்திருக்கிறார். ஸ்டாலின் உள்ளிட்ட யார் சொல்லியும் மக்கள் கேட்காததால் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புகிறார். இது எந்த விதத்தில் நியாயம்? இதுக்குன்னு செய்தி மக்கள் தொடர்புத்துறை இருக்குது. அதை ஏன் பயன்படுத்தலை, எல்லாம் பயம். துறைச் செயலாளர்கள் உண்மை செய்தியை சொல்லுங்க. வேண்டாம்னு சொல்லலை, திமுக செய்யாத திட்டத்தை சொன்னால் அதுக்கு முழு பொறுப்பு அவங்க தான்.

2021 திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை செயல்படுத்துவோம்னு சொன்னீங்க, 10% கூட செய்யவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாகக் குறைந்துவிட்டது. கல்விக் கடன் ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்துன்னு சொன்னாரு. முதல் கையெழுத்துன்னு சொன்னார், ரத்து செய்தாரா? உதயநிதி அந்த ரகசியத்தை சொன்னாரா? பொய்யான ஆட்சிக்கு மரண அடி கொடுக்கணும். உரிமைத் தொகை 1000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறார். 28 மாதம் கழித்து கொடுத்தார்.

அதுவும் அதிமுக போராடியதால் தான் கொடுத்தார். 1 கோடியே 15 லட்சம் பேருக்குத் தான் கொடுத்தனர். இன்னும் 8 மாதம் தான் இருக்கு. இப்ப 30 லட்சம் பேருக்குக் கொடுக்கிறாராம். தேர்தலை எதிர்நோக்கியே கொடுக்கிறார், பெண்கள் மீது இரக்கப்பட்டு கொடுக்கவில்லை. ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை கொடுத்தாரா? கேஸ் மானியம் கொடுத்தாரா? 525 அறிவிப்பு வெளியிட்டாரு செய்யவில்லை.

டாஸ்மாக் கடையில் கள்ளச்சரக்கு. ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்பனையாகுது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் மேலிடத்துக்குப் போகுதாம். வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் கொள்ளை. ஏழை மக்கள் தான் டாஸ்மாக் போறாங்க, அது தவறுதான். ஆனா, அந்த ஏழைங்ககிட்டே புடுங்குற அரசு திமுக அரசு. அதனால்தான் ஆண்டவன் செந்தில் பாலாஜியை உள்ளே வச்சிட்டார். அமலாக்கத்துறை விசாரணையில் 1000 கோடி ஊழல், மொத்தம் 40 ஆயிரம் கோடி என்று செய்திகள் வருகின்றன.

2001 தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இருந்தீர்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா? இதெல்லாம் சிறுபான்மை மக்கள் ஓட்டு வாங்குவதற்கு போடும் வேஷம். சிறுபான்மை மக்களே, திமுகவை நம்பி ஏமாறாதீங்க. எங்களுக்கு கூட்டணி வேறு கொள்கை வேறு. திமுக கொள்கையை அடமானம் வைக்கும் கட்சி.
கம்யூனிஸ்ட், விசிக எல்லாம் கொள்கையில் ஒற்றுமையான கட்சியா.? எல்லோருக்கும் ஒரே கொள்கையா? அதிமுக அப்படியல்ல, தேர்தலில் ஓட்டுகள் சிந்தாமல் கிடைப்பதற்கான கூட்டணி. இப்படி கூட்டணி சேர்ந்தால்தான் வாக்குகள் சிதறாமல் கிடைக்கும். திமுகவை அகற்ற வேண்டும் என்பதே அதிமுக இலக்கு. அதேதான் பாஜகவின் எண்ணம். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றாக சேர்க்கிறோம்.

நீங்க நினைச்சுப் பார்க்காத அளவுக்கு கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வரப்போகிறது. 210 தொகுதிகளை வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பனி. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்ப இன்பநிதி வந்தாச்சு. பதவியைக் காப்பாற்ற அமைச்சர்கள் இன்பநிதியையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும். இப்படி நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம். தலைவர் பதவி, முதல்வர் பதவி யாருக்கும் கொடுப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

அதிமுக ஆட்சி இருக்கும்போது, டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரி கீழவன்னியூரில் கட்டிக்கொடுத்தோம். அரசு பாலிடெக்னிக் கட்டிக்கொடுத்தோம். அரசு தொழிற்பயிற்சி நிலையம் கொண்டு வந்தோம். நிலத்தடி நீர் உயர கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை 400 கோடியில் கட்டிக்கொடுத்தோம். பணி முடிந்து இன்னும் திறக்கவில்லை, இப்ப மேட்டூரில் உபரி நீர் கடலில் கலக்குது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? புதிய தாலுகா அலுவலகம் கட்டிக்கொடுத்தோம் ஸ்ரீமுஷ்ணத்தில். ஊராட்சி ஒன்றியம் கொடுத்தோம்.

அதனால் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம். இப்படி ஒன்றாவது திமுகவால் சொல்ல முடியுமா? மக்கள் விரோத ஆட்சியை 2026ல் அகற்ற வேண்டும். எட்டுத்திக்கும் சொல்லட்டும், இரட்டை இலை வெல்லட்டும். 2026 தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு அந்த கட்சியோட சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement