காவல் அதிகாரியை கண்டித்த அமைச்சரின் மனைவி... வலுக்கும் கண்டனங்கள்..
ஆந்திர பிரதேசத்தில் அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, தன்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரியை கண்டித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 4வது முறையாக முதலமைச்சராக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டுள்ளார். துணை முதலமைச்சராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பதவியேற்றார்.
சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, தன்னைக் காத்திருக்க வைத்ததற்காக ரமேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கண்டித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, காவல் துணை ஆய்வாளரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார். அப்போது, “இன்னும் காலை ஆகவில்லையா? என்ன கான்பரன்ஸ்? கல்யாணத்துக்கு வந்திருக்கியா? ட்யூட்டிக்கு வந்திருக்கியா? உங்களுக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன். உனக்கு சம்பளம் யார் தருவது? அரசாங்கமா அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியா?” என்று கடுமையான பேசியுள்ளார்.
The treatment of SI Ramesh by Haritha Reddy is a disgrace and it shows the amount of head power that @JaiTDP leaders have towards public servants. As the wife of a minister, she should uphold the values of respect and dignity towards our police force. Such behavior undermines… https://t.co/bXfmMt4ug5
— YSR Congress Party (@YSRCParty) July 2, 2024
வீடியோவின் முடிவில், காவலர் ராமேஷ், ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, அவரது வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி தர முன்னோக்கி செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், “அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமை போல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தார்” என தெரிவித்துள்ளது.