“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்" - புதிய கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி!
“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் புதிய கட்சியை
ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி
என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் மகள் என
கூறிக்கொண்டு தமிழ் செய்தி ஊடகங்கள் மூலம் வெளிவந்தார்.
ஜெயலலிதாவின் சொத்துக்கும் அரசியல் வாரிசுக்கும் தான் ஒருவரே சொந்தக்காரர் என கூறிக் கொண்ட ஜெயலட்சுமி இன்று டெல்லியில் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசியுள்ள ஜெயலட்சுமி “எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய தாய் ஜெயலலிதாவின் பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் சிலர் ஈடுபட்டு வருவதால் கட்சி தொடங்க வேண்டிய சூழல் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுகவை மீட்டெடுப்பதற்காகவே நான் கட்சியைத் தொடங்கியுள்ளேன் எனவும் பேசியுள்ளார். அதே நேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் மகள் என கூறப்படும் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் சொத்துக்களை மீட்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பின் மூலம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.