"முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும். சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9 ஆயிரத்து 335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9 ஆயிரத்து 744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8ஆயிரத்து 779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் மாமல்லபுரம், உதகை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 500 கிமீ தூர வனப்பகுதி சாலைகள் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்கு 1031 கோடி ரூபாய் செலவில் புதியதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும். போக்குவரத்து துறைக்கு என மொத்த 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் 50 கோடி ரூபாய் செலவில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும். சென்னைக்கு 905, கோவைக்கு 75 மற்றும் மதுரைக்கு 10 என மொத்தம் 1125 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.