குஜராத்தில் 427 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!
குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் ஜிஐடிசி பகுதியில் உள்ள ‘அவசார் எண்டர்பிரைஸ்’ என்ற நிறுவனத்தில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 141 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 427 கிலோ எடையுள்ள பிற சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருட்களை உறுதிப்படுத்துவதற்காக, தடவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக சிறப்பு செயல்பாட்டுக் குழு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் சவுத்ரி தெரிவித்தார். நேற்று இரவு பரூட் மாவட்ட சிறப்பு படைக் குழு போலீஸ் மற்றும் சூரத் போலீஸார் இணைந்து நடத்திய சோதனையில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த அக். 13 அன்று அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில் குஜராத் மற்றும் டெல்லி காவல்துறையினரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 500 கிலோ அளவிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் சில வாரங்களுக்கு முன்பு 562 கிலோ கொகைன் மற்றும் 40 கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த அக். 10 அன்று 208 கிலோ கொகைனை ரமேஷ் நகரிலுள்ள கடையில் வைத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இந்த போதைப் பொருள்கள் பார்மா சொல்யூசன்ஸ் எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையிலுள்ள அவ்கார் மருந்து நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.