"விஜயகாந்த் நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்" - செல்வப்பெருந்தகை!
மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரை உலகினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து விஜயகாந்தின் நினைவுகள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.
தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.
அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.