For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மயிலாடுதுறை படுகொலை - முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
01:26 PM Feb 15, 2025 IST | Web Editor
மயிலாடுதுறை படுகொலை   முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம்
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்த நிலையில், தட்டி கேட்பவர்களை அடித்தும், கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (பிப்.13) ராஜ்குமார் ஜாமினில் வெளிவந்துள்ளார். அப்போது தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரும் கத்தியால் குத்தியுள்ளனர். சராமாரியாக கத்தியால் குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்பகை காரணமாகவே சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளனர். ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தொடர்பாக நடந்த சம்பவம் என்றும் சாராயம் விற்பனையை தட்டி கேட்டதால் கொலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான தகவல் எனவும், இதனை பரப்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளி ராஜ்குமார் என்பவரின் கூரை வீட்டினை எதிர்த்தரப்பினர் கொளுத்தியதுடன் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய இருவரது வீட்டில் உள்ள பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இரண்டு தரப்புகளை சேர்ந்தவர்களும் ஒரே சமூகத்தினர் என்பதால் சமூக பதற்றம் ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் போலீசார் 10க்கு மேற்பட்டோர் முட்டம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து இளைஞர்களை கொலை செய்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement