மயிலாடுதுறை | ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் - குற்றவாளி சிறையில் அடைப்பு!
மயிலாடுதுறையில் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (57). இவர் தஞ்சாவூரில் இருந்து நேற்று முன்தினம் (டிச. 30) இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில் பயணித்தார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம் - வல்லம்படுகை இடையே ரயில் சென்ற போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், சுந்தரவேலு அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி கூச்சலிட்டதால் சிறுமியின் பெற்றோர் சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரயில்வே போலீஸார் அந்த குற்றவாளி சுந்தரவேலுவை சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.