ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பு!
பாஜக அரசு மதத்தை வைத்து அரசியல் செய்வதால், அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கமாட்டார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
"உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது. நாங்கள் மத நம்பிக்கைகளையும், அதன் உணர்வுகளையும் மதிக்கிறோம். ஆனால் இந்த பாஜக அரசானது மதத்தை அரசியலுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவின் நோக்கம் சரியானது அல்ல."
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.