Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டில் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன” - அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
07:02 PM Mar 20, 2025 IST | Web Editor
Advertisement

பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கின்றன. இன்று சட்டசபையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 7,500 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக சொன்னார்கள். இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், மானியக் கோரிக்கையில், அன்பழகனார் என்ற பெயரே இல்லை. நபார்டு வங்கியிடமிருந்து, ஊரக அடிப்படை வசதி வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்பட்ட கடன் உதவி மூலம் பள்ளிக் கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. அதற்கும் சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது.

ஆனால், நேற்று சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் பெரியசாமி கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் செயல்படுவதை நாம் பார்த்தோம்.

விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் பல கோடி மதிப்பீட்டில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பதும், ஆனால், மானியக் கோரிக்கையில் அந்தத் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் இருப்பதும், திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும். பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் நாடகமாடும் போக்கினை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது”

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Anbil Mahesh PoyyamozhiAnnamalaiBJPDMKTNSchool
Advertisement
Next Article