மன்மோகன் சிங் மறைவு - கன்னியாகுமரி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2நாட்களாக குறைப்பு!
கன்னியாகுமரியில் இன்று தொடங்கி ஜன.1ம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா இன்று , நாளை மற்றும் ஜன. 1 ஆகிய 3 தினங்களிலும் கன்னியாகுமரியில் கொண்டாடப்பட உள்ளன.
அதேபோன்று நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, திறப்புக்கு தயாராக உள்ளது. இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளது. கடல் நடுவே திருவள்ளுவரின் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கின்றன. கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் மின்னொளிகளால் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று திறப்புக்கு தயாராக உள்ள கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது..
“ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்களாக நிகழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.