மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை நினைவு தினம் - அரசியல் கட்சியினர் அஞ்சலி!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.தொழிலாளர்கள் பேரணியாக வந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடியபோது, காவல்துறையினரால் அவர்களை தாக்கினர். இதில், 17 தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில்
மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தின் 25- வது நினைவு தினம் இன்று
அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று நெல்லை கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் மேம்பாலத்தின் கீழ் தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றுகூடி, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி மாவட்ட
தலைவர் முத்துபலவேஷம் உள்ளிட்ட பாஜகவினர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், மாவட்டத்தலைவர் சங்கரபாண்டியன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் மலர்வளையம் வைத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி கொக்கிரகுளம் பகுதி, தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.