முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் - நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்றுவருவதாகவும், 49 டெண்டர் ஆவணங்கள் 24 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் இதே முறையீடு தொடர்பாக தாங்களும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்று இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வரும் காவல்துறையினரை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அசன் முகமது ஜின்னா சுற்றறிக்கை அனுப்பியதற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். அதே வேளையில் காவல்துறையினரும் நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் பதில் தர முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்த அசன் முகமது ஜின்னா இது தொடர்பாக டிஜிபியிடம் பேசி கோர்ட் செல் என்ற ஒரு பிரிவு உருவாக்கி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.