மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.
சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.
இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மதிமுகவில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.