உ.பி.யில் ஆண் தையல்காரர்கள், உடற்பயிற்சியாளர்களுக்கு தடை... மகளிர் ஆணையம் பரிந்துரை!
உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல பரிந்துரைகளை மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஜிம் பயிற்சியாளரால் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடற்பயிற்சி கூடங்கள் போன்ற இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இதனை கருத்திற்கொண்ட உ.பி. மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சில தீவிர நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
கடந்த அக்.28ஆம் தேதி நடந்த மகளிர் ஆணையக் கூட்டத்தில் ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசை மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, அனைத்து மகளிர் உடற்பயிற்சிக் கூடங்களிலும், யோகா மையங்களிலும் பெண் பயிற்சியாளர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இதனால் பெண்கள் இங்கு பாதுகாப்பற்ற தன்மையை உணரத் தேவையில்லை என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆண் தையல்காரர்கள் பெண்களுக்கு அளவெடுக்கக்கூடாது எனவும், பெண் ஊழியர்கள் மட்டுமே பெண்களின் அளவீடுகளை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. ஆண்கள் அளவுகள் எடுப்பதால் பெண்கள் அசௌகரியாக உணர்கிறார்கள். இந்த அசௌகரியத்தையும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தவிர, பள்ளி வாகனங்களிலும் பெண் பாதுகாப்பு பணியாளர்கள் அல்லது பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதேபோல், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களில், பெண் பணியாளர்கள் மட்டுமே பெண் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த விதிகள் மூலம் பெண்கள் இந்த இடங்களில் அதிகப் பாதுகாப்பாக உணர்வார்கள் என்றும் அவர்கள் அச்சமின்றி தங்கள் செயல்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகளுக்கு சிலர் வரவேற்பளித்தாலும், பலரும் உபி அரசு தாலிபான் கொள்கைகளை நகலெடுப்பதாக விமர்சித்துள்ளனர். மகளிர் ஆணையம் பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட பரிந்துரைகளை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.