பணிப்பெண் சித்ரவதை வழக்கு - இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ், 6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் இருந்து அப்பணிப்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 6 மாத பாக்கி சம்பள பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மெர்லினா. இவர்கள் வீட்டில் பட்டியலின இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணை திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் மெர்லினா மற்றும் ஆண்டோ மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இதையும் படியுங்கள்: “டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி… எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம்…” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!!
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தலைமறைவானதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 6 மாத பாக்கி சம்பள பணத்தை எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.