வீடு புகுந்து பெண் குத்தி கொலை - இருவர் கைது!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் (40). இவர் தனது மனைவி கலைத்தாய் (33) உடன் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வசித்து வந்தார். கலைத்தாய் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அந்த கம்பெனியின் உரிமையாளர் அரிச்சந்திரனிடம் (42) கலைத்தாய் அடிக்கடி பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் பணத்தை அரிச்சந்திரனிடம் இருந்து கலைத்தாய் வாங்கினார். அதன் பின்பு கலைத்தாய் வேலைக்குச் செல்லாமல் இருந்தார். இது குறித்து அரிச்சந்திரன் கலைத்தாயிடம் பலமுறை விசாரித்தும் அதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரிச்சந்திரன் தனது உறவினரான புதுக்கோட்டைச் சேர்ந்த பிரசாத் (30) என்பவருடன் சேர்ந்து கலைத்தாயின் வீட்டிற்குச் சென்றார்.
இருவரும் கலைத்தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது கலைத்தாய்க்கும் அரிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற அரிச்சந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கலைத்தாயை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த கலைத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சூழலில், கலைத்தாயின் நண்பரான விக்னேஷ் (32) அங்கு வந்தார். அவரை பார்த்த அரிச்சந்திரன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த விக்னேஷ் வீட்டிற்குள் சென்ற நிலையில், அங்கு கலைத்தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக விக்னேஷ் இச்சம்மவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலைத்தாயின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அரிச்சந்திரன், பிரசாத்தை தேடி வந்தனர். தொடர்ந்து போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர்.