#Maharashtra | முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 99 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் வந்தேரா தெற்கு தொகுதியில் மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செலார், கான்காவ்லி தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினரான நாராயண ராணேவின் மகன் நிதின் ராணே போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கொத்ரூட் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அஷோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படியுங்கள் :"தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்" - ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !
இந்தத் தேர்தலில் பாஜக மொத்தமாக 150 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. எனவே, மகராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடனும் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடனும் பாஜக கடுமையான தொகுதி பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.