#Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter‘
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீது ஏறி நின்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரவிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்த புல்டோசர் நடவடிக்கை சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
அந்த வகையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சட்ட அமலாக்கம், சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அத்துமீறல்களைக் கையாள்வதில் தனது அரசாங்கத்தின் தீவிரமான அணுகுமுறைக்காக 'புல்டோசர் பாபா' என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆரவாரமான கூட்டத்தின் மத்தியில் நகரும் ஜேசிபி லோடருக்குள் இரு ஆண்கள் நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ஒருவர் பாஜக துண்டு அணிந்துள்ளார். மற்றொருவர் யோகி வழக்கமாக அணிந்திருப்பதைப் போன்ற காவி உடையை அணிந்துள்ளார். யோகி ஆதித்யநாத் பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதை போல வீடியோவில் தெரிகிறது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர் இந்த வீடியோவை பகிர்ந்து "புல்டோசர் தனது அடையாளத்துடன் கிட்டத்தட்ட ஒத்ததாகிவிட்டது. மேலும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வது யோகி ஜியின் தனிச்சிறப்பு" என பதிவிட்டுள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. காவி உடையில் இருப்பவர் பாஜக தொண்டர், யோகி ஆதித்யநாத் அல்ல. மகாராஷ்டிர மாநிலம் முர்திசாபூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ வேட்பாளர் ஹரிஷ் பிம்பிள் என்பவர் பாஜக துணி அணிந்துள்ளார். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பின் போது, வீடியோவின் கீஃப்ரேம்களின் தலைகீழ் படத் தேடலை நடத்தியதில், நவம்பர் 6 அன்று ஏபிபி மஜாவால் வெளியிடப்பட்டதை காணமுடிந்தது. மகாராஷ்டிராவின் அகோலாவில் தனது பிரசாரத்திற்காக பாஜக வேட்பாளர் ஒருவர் யோகி ஆதித்யநாத்தை ஒத்த தோற்றத்தை அணிந்து வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உறுதிப்படுத்தலுக்கு, அகோலா மாவட்டம் முர்திசாபூரில் யோகி ஆதித்யநாத்தின் பேரணிக்குப் பிறகு புல்டோசர் பேரணி நடந்துள்ளது. ஆனால் புல்டோசரின் மீது ஏறி நின்றவர் யோகி ஆதித்யநாத் அல்ல என்பதை தெளிவுபடுத்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, "நான் ஒரு பாஜக நிர்வாகியுடன் ஜேசிபியில் நின்று கொண்டிருந்தேன். அவர் காவி உடை அணிந்து பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். அவரது பெயர் தெரியாது” என்று பாஜக துண்டு அணிந்திருந்தவர் தெரிவித்துள்ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளின்படி, யோகி ஆதித்யநாத் நவம்பர் 6 அன்று வாஷிம், அமராவதி மற்றும் அகோலாவில் மகாயுதி (NDA கூட்டணி) வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். யோகி புல்டோசர் பேரணியை வழிநடத்தியதாக எந்த அறிக்கையும் குறிப்பிடவில்லை. முர்திசாபூரில் யோகியின் பேரணியில் இருந்து ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் படங்கள் பகிரப்பட்டுள்ளது.
முடிவு:
எனவே யோகி ஆதித்யநாத் அந்த புல்டோசர் பேரணியில் கலந்துகொள்ளவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.