#Maharashtra | ரூ.6.20 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்த முயற்சி - தட்டி தூக்கிய போலீசார்!
மகாராஷ்டிராவில் திமிங்கல வாந்தியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பைப்லைன் சாலையில் இருந்து பாத்லாபூருக்கு கார் மூலமாக திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, திமிங்கல வாந்தியை கடத்த முயன்ற 3 போரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.6.20 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ திமிங்கல வாந்தியை (அம்பர்கிரிஸ்) போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனில் போசலே, அங்குஷ் சங்கர் மாலி மற்றும் லக்ஷ்மன் சங்கர் பாட்டீல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமிங்கல வாந்தி (அம்பர்கிரிஸ்) என்பது திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றப்படும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும்.
இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து காணப்படும். இதனை பயன்படுத்தி வாசனை திரவியம், மருந்து மற்றும் மசாலாக்கள் தயாரிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிக அதிகம். இந்தியாவில் திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திமிங்கலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் திமிங்கலத்தின் வாந்தியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.