மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது!
மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகா் சாஹில் கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாதேவ் சூதாட்ட செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள், செயலியின் உரிமையாளா்கள் லாபம் அடையும் வகையிலும், பந்தயம் கட்டி விளையாடுவோருக்கு நஷ்டம் ஏற்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த மோசடி தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், மகாதேவ் செயலியின் உரிமையாளா்களான சத்தீஸ்கரை சோ்ந்த ரவி உப்பல், செளரவ் சந்திராகா் ஆகியோா் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த செயலி மூலம் சுமாா் ரூ.6,000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சத்தீஸ்கா் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலுக்கு ரவி உப்பலும், செளரவ் சந்திராகரும் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை சந்தேகித்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக 9 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் மகாதேவ் செயலி உரிமையாளா்களுக்கும், மகாராஷ்ராவின் சில நிதி நிறுவனங்கள் மற்றும் மனை விற்பனை நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக ஹிந்தி நடிகா் சாஹில் கான் உள்பட 32 போ் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடா்பாக ஹிந்தி நடிகா் சாஹில் கானிடம் மும்பை காவல் துறையின் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அண்மையில் விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சாஹில் கானின் முன்ஜாமீன் மனுவை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் மும்பை போலீசின் எஸ்ஐடி சாஹில் கானை ஏப்.27 ஆம் தேதி கைது செய்தது. மகாதேவ் செயலி மூலம் ரூ.6,000 கோடி மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ள நிலையில், மும்பை போலீசின் முதல் தகவல் அறிக்கையில் ரூ.15,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை, மும்பை காவல் துறை தவிர, சத்தீஸ்கா் ஊழல் தடுப்பு மற்றும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவும் இருவரை கைது செய்துள்ளது.