மதுரை | தலைமை ஆசிரியரிடம் நகை பறிப்பு - தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
மதுரையில் தலைமை ஆசிரியரிடம் செயின் பறித்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாக்கிலிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சாந்தி (55). இவர் நேற்று மதியம் வீட்டிற்கு செல்லும்போது தனது சக ஆசிரியரை உச்சப்பட்டி சாலையில் இறக்கிவிட்டு திருமங்கலத்தை நோக்கி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பல்சர் வண்டியில் 2 நபர்கள் தலைமை ஆசிரியரிடம் வழி கேட்பது போல் அவரை நிறுத்தி, அவர் கழுத்தில் இருந்த 41/2 பவுன் சங்கிலியை அறுத்து விட்டு ஓட முயன்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரை தலைமை ஆசிரியர் இழுத்து பிடித்து தப்பிக்க விடாமல் செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனே ஓடிவந்து அவனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். வண்டியில் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திருநகரை சேர்ந்த கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தியும் (29) மற்றொரு நபர் வில்லாபுரத்தை சேர்ந்த அஜய் (29) என்றும் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய அஜய் என்பவனை தீவிரமாக ஆஸ்டின் பட்டி காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.