மதுரை வரி முறைகேடு வழக்கு - மேயர் கணவர் பொன்.வசந்த் சிறையில் அடைப்பு!
மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ. 150 கோடி வரி முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், இன்று சிகிச்சை முடிந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக, பொன்.வசந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், மருத்துவப் பரிசோதனையின்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையிலேயே, நேற்று மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி ஆனந்த், பொன்.வசந்திற்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவடைந்த நிலையில், இன்று அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறைகேடு தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.