மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்: 3 மணி நேரத்தில் மீட்பு!
மதுரையில், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை, 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர்.
மதுரையைச் சேர்ந்த மைதிலி என்பவரின் மகன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநருடன் கும்பல் திடீரென கடத்திச் சென்றது. இதையடுத்து, கடத்தல் கும்பல் அந்த மாணவரின் தாய் மைதிலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மீரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது, 2 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே பள்ளி மாணவன் விடுவிக்கப்படுவார் என கடத்தல் கும்பல் மைதிலிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மைதிலி எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன்” – ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி!
இந்நிலையில், மைதிலி புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், கடத்தல் கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். அப்போது, காவல்துறையினர் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அந்த மாணவன் மற்றும் ஓட்டுநரை விட்டு விட்டு தப்பியோடினர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மாணவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.