Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” - வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

08:40 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவின் வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு, ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.

Advertisement

மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீது உரையாற்றிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ரயில்வே பட்ஜெட்டையே ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சாரும் என்றும், மூத்தோர்களுக்கான பயணச் சலுகை, கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது எனவும் விமர்சித்தார். தமிழ் மொழி தெரியாதவர்களே இன்றைக்கு ரயில்வேயில் இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தை வஞ்சிக்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் பல்வேறு கருத்துக்களை பேசியிந்தார்.

இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “உணர்ச்சி பொங்க பேசி, தனது கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறார் சு.வெங்கடேசன்” என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு ட்விட்டரில் (X) பதிலளித்துள்ள சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மரியாதைக்குரிய வானதி சீனிவாசன் அவர்களே, ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா?

வருடந்தோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா?

இவ்வளவு விபத்துகள் நடந்த பின்பும் பாதுகாப்புக்கான கவச் எந்திரம் என்ற சொல்லே இல்லாமல், அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமே இல்லாமல் பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது உண்மையா, இல்லையா?

ரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இது உண்மையா, இல்லையா?

ஆவணங்களை வெளியிடாமலே இரயில்வே துறையின் விவாதங்களை நடத்தி முடித்துவிட்டது மோடி அரசு. இது உண்மையா, இல்லையா?

இந்த ஆண்டு ரயில்வேக்கு 2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? இரட்டை பாதை திட்டத்துக்கு எவ்வளவு? புதிய வழித்தடங்களுக்கு எவ்வளவு? மின்மயமாக்கலுக்கு எவ்வாளவு? இந்த ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய பிங்க புத்தகம் எங்கே? இந்த எளிமையான கேள்விகள் தான் எங்களுடையது. இதில் கட்டுகதைகளும், மக்களை ஏமாற்றும் முயற்சியும் எங்கே இருக்கிறது?

முழுமையான ஆவணங்களை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளட்டும். தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று முக்கிய இரட்டை பாதை திட்டங்களுக்கும் கடந்த காலத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை நான் சுட்டிக்காட்டிய பின் 2023 -24 பட்ஜெட்டில் 50 கோடி 100 கோடி என்று ஒதுக்கப்பட்டது.

ஆனால் அது பாதுகாப்பு நிதி என்று கூறி திரும்பப்பெறப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியம் தான். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு 150 கோடி ஒதுக்கப்பட்டது. அது தேர்தலுக்காக செய்யப்பட்ட வெற்று அறிவிப்பா? அல்லது உண்மையான ஒதுக்கீடா என்பது பிங்க் புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்.

தேர்தலுக்காக வந்த பாஜக அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ்கான வேலையெல்லாம் முடிந்து கட்டிடப்பணி துவங்கிவிட்டது என்று கூறினார்கள். ஆனால் இன்று மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர் பணிகள் துவக்கப்படும் என்கிறார்.

வானதி சீனிவாசன் அவர்களே! ரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவைகள் மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி இவ்வாறு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCentral BudgetcondemnfundsMaduraimpnews7 tamilNews7 Tamil Updatesrailway Schemessu venkatesanTamilNaduvanathi srinivasanVenkatesan
Advertisement
Next Article