மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இன்று தொடங்கி 11 நாட்கள் தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் ஜன 19-ம் தேதி சைவ சமய நிறுவன வரலாற்று லீலையும், 21-ம் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடக்கிறது. தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி பிப்ரவரி 23-ம் தேதியும் இதைத்தொடர்ந்து 24-ம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா தைப்பூச நாளான 25-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் அதிகாலை கோயிலில் இருந்து புறப்படாகி தெப்பக்குளத்தைச் சென்றடைவர். அங்கு அலங்கரித்த தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும்.