மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!
மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
3 நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!
இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவர், மேலூர் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி உட்பட நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மதுரையை சேர்ந்த 17 நபர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த 13 நபர்கள் என மொத்தம் 30 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.