#Madurai | களைகட்டிய தீபாவளி விற்பனை - மாசி வீதிகளில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!
தீபாவளி 3 நாட்களே உள்ள நிலையில் மதுரை கடை வீதிகளில் விற்பனை களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மதுரையில் உள்ள 4 மாசி வீதிகள், விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை, பைபாஸ் சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கடைவீதிகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகள், நகைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர தொடங்கினர்.
தீபாவளி விற்பனை காரணமாக மாசி வீதிகள் முழுவதிலும் பொதுமக்கள் குவிந்திருந்தனர். தீபாவளி விற்பனையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 25 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.
விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்களும் ஆர்வமுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான புதிய ரக ஆடைகள், புதிய வடிவிலான நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விறுவிறுப்புடன் விற்பனையாகி வருகிறது.