“மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை” - நடிகை #Namitha
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம் சாட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார்.
அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச மாதங்களிலேயே, இளைஞர்களின் மனதில் தனக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பின் இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார்.
பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.
பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. மேலும் அவர் பாஜகவிலும் இணைந்தார். இப்படி இருக்கும் நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம் சாட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று நமீதா தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி முத்துராமன் என்பவர் நமிதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
“மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை”
- நடிகை நமீதா#TamilNadu | #Namitha | #BJP | #Madurai | #Temple | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/6rmyp3zwmM
— News7 Tamil (@news7tamil) August 26, 2024