மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர்கள் மட்டுமே கட்டி முடித்ததுடன் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான விடப்பட்ட டெண்டரை எல்&டி நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளை எல்&டி நிறுவனம் தொடங்கியது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
எனவே, மே 2-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், 900 படுக்கை வசதியுடன் கூடிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கியதாக எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, தங்கும் விடுதி ஆகியவை கட்டுப்படுவதாகவும், 18 மாதங்களுக்குள் முதல்கட்ட கட்டுமான பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.2021 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 5,000 நோயாளிகளை பரிசோதனை செய்ய வெளி நோயாளிகள் பிரிவும் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.