தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் | வழக்கை ரத்துசெய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மக்களவை தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்க பட்டனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விதிமுறைகளுக்கு புறம்பாக சம்மன் வழங்கப்பட்டிருப்பதால் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
சிபிசிஐடி தரப்பில், உரிய சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி , தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தாலும் சம்மனை ரத்து செய்தாலும் வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.