For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:35 PM Nov 10, 2023 IST | Jeni
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்   சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போது,  கனரக இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை ஈசிஆரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேரும் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதாலும், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். மேலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொடிக்கம்பம் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதனை மீறி கொடிக்கம்பம் வைத்ததாகவும் கூறினார். உடைக்கப்பட்ட JCB இயந்திரத்தின் கண்ணாடியின் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய் எனவும் வழக்கறிஞர் முனியப்பராஜ் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கின் தற்போதைய நிலை என்ன எனவும், அவர் இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள் : நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்..! - பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம் 

மேலும், JCB இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு ஆறு பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசிடம் அனுமதி பெறாமல் சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைக்க கூடாது எனவும் உத்தரவிட்டார். 55 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது குறுக்கிட்ட நீதிபதி, அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்ற யாருக்கு தெரியும் என கேள்வி எழுப்பியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

Tags :
Advertisement