சென்னை மடிப்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது! 303 கிலோ கஞ்சா பறிமுதல்!
மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டு 303 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய “போதை தடுப்புக்கான நடவடிக்கை” என்ற பெயரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் காவல் குழுவினர் இன்று (ஜன.30) மடிப்பாக்கம், கைவேலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த வழியே 2 கார்களில் வந்த நபர்களை பிடித்து, காரை சோதனை செய்த போது, காரில் கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், காவல்துறையினர் காரில் கஞ்சா கடத்தி வந்த கிஷோர் (எ) ரஞ்சன் கிஷோர், அசோக் (எ) ஒத்தக்கண் அசோக் மற்றும் உதயகுமார் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 303 கிலோ எடை கொண்ட கஞ்சா, 7 செல்போன்கள்,
-3 அரிவாள்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படியுங்கள்: பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிஷோர் (எ) ரஞ்சன் கிஷோர் குமார் என்பவர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்பதும் இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனுடன் இவர் மீது 8 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து அசோக் (எ) ஒத்தக்கண் அசோக் மீது 16 குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் உதயகுமார் மீது 13 குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.