ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்!
வடமாநிலங்களில் ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக நடந்தி வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை அடிப்படையில் தான் கிரிமினல் வழக்குகள் கையாளப்பட்டு வந்தன. இருப்பினும், இது ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி இச்சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது.
இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் ஹிட் & ரன் எனப்படும் விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் இந்த ஹிட் அண்ட் ரன் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டு அன்று தொடங்கிய இப்போராட்டம் இரண்டு நாட்களாக தொடர்ந்த நிலையில், மத்திய அரசு பிரதிநிதிகளுடன் மோட்டார் வாகன சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
போராட்டம் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, தற்காலிமாக இந்த ஹிட் அண்ட் ரன் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்தார். மத்திய அரசின் இந்த உறுதிமொழியை அடுத்து, லாரி ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.