மக்களவைத் தேர்தல் 2024 - தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் பிரச்சாரத்தை டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க பாஜக முடிவு செய்துள்ளது. 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரச்சார வாகனங்களை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அதற்கான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி.நட்டா தெரிவித்ததாவது..
” பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த நலத்திட்டப் பணிகள் குறித்து விவரத்தை இந்த விடியோ பிரசார வேன்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கான அமிர்த காலம் நடைபெற்று வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பொதுமக்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தொடர்பான யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்” என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.