அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன் முழு விவரங்களை காணலாம்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீட்டை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நிறைவு செய்துள்ளன.
இந்த நிலையில் அதிமுக தங்களது கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளன. இதன்படி அதிமுக 33 தொகுதிகளில் தனித்து களம் இறங்குகிறது. மேலும் தேமுதிகவிற்கு திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் - ஜெயபிரகாஷ்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சரயுவிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். வேட்பு மனு தாக்கல் செய்தபோது மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ, பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் . உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன்
தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தியிடம் தனது வேட்புமனுவை அவர் வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார்.
திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் - முகம்மது முபாரக்
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகம்மது முபாரக் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர்.
திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் - கருப்பையா
திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் - சிங்கை ராமச்சந்திரன்
கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்
பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்
பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சண்முகநாதன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் - விஜய பிரபாகர்
அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.
திருவள்ளூர் (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் - நல்லதம்பி
அதிமுக கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வேட்புமனு தாக்கல் செய்தார். தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா , முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் - ஜி வி கஜேந்திரன்
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி வி கஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர்கள் சேவூர் இராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் தூசி மோகன், ஜெயசுதா ஆகியோர் உடன் இருந்தனர்
கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் வேட்புமனு
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.